நான் – லீனியர் திரைக்கதை

பொதுவாகப் படங்களில், ஆரம்பக் காட்சியிலிருந்து காலம் முன்னோக்கி மட்டுமே நகர்ந்தபடி இருக்கும். அது, சில மணி நேரத்துக்குள்

ஓரிடத்தில் நடக்கும், Rope (1948), 12 Angry Men (1957) போன்ற கதையாக இருந்தாலும் சரி, ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையோ - ஒரு நாட்டின் வரலாற்றையோ சொல்லும், Ben-Hur (1959), Braveheart (1995) போன்ற கதையாக இருந்தாலும் சரி, இந்தப் பொது விதி பொருந்தும். ஒரு படத்தை எந்த ஒரு கட்டத்தில் நிறுத்திப் பார்த்தாலும், அதற்கு முந்தய காட்சிகள் காலத்தால் முந்தியதாகவும், பிந்தைய காட்சிகள் காலத்தில் பிந்தியதாகவும் இருக்கும். இது நேர்ப்பாங்காக கதைசொல்லும் (Linear Narrative) பொதுவான லீனியர் திரைக்கதை வடிவம்.

நான்லீனியர் திரைக்கதை

'நேர்ப்பாங்கற்ற கதைசொல்லல்' (Nonlinear Narrative) என்றால், மாறிய காலவரிசையில் அல்லது கால ஓட்டத்தின் ஒழுங்கை முன்-பின்னாக மாற்றிக் கதை சொல்வது என்று அர்த்தம்.
இதன் எளிய வடிவத்தை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். நேர்க்கோட்டில் செல்லும் கதையின் இடையில், முன்பு எப்போதோ நடந்த சம்பவங்கள் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக வந்துவிட்டுப்போகும். திரைக்கதாசிரியர், நேர்கோட்டில் முன்னேறும் கால ஓட்டத்தை சற்றே நிறுத்தி, காலத்தில் முன்போ (Flash Back) அல்லது பின்போ (Flash Forward) சென்றுவிட்டு, மீண்டும் திரும்பிவந்து கதையின் கால ஓட்டத்தைத் தொடர்வார்.
சில திரைக்கதைகளில் மிக நீளமான ஃப்ளாஷ் பேக் இருக்கலாம், மொத்தக் கதையுமேகூட ஃப்ளாஷ் பேக்’காக வரலாம். உதாரணத்துக்கு டேவிட் லீன் இயக்கிய
“லாரன்ஸ் ஆஃப் அரேபியா” (1962), லாரன்ஸின் இறப்புக்கு காரணமான பைக் விபத்தில் ஆரம்பித்து, பின்பு படம் முழுமையும் ஃப்ளாஷ் பேக்யில் காட்டப்படுகிறது. அட்டன்பரோவின் “காந்தி” (1982) படம், மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் ஆரம்பித்து, பின்பு அவருடைய மொத்த வாழ்க்கையையும் ஃப்ளாஷ் பேக்காகக் காட்டி, இறுதியில் காந்தியின் அஸ்தி கரைக்கப்படுவதோடு முடிகிறது.சில திரைக்கதைகளில், “அலைபாயுதே” படத்தில் வருவதைப்போல, நிகழ்காலத்தில் ஒரு கதைத்தொடர் நடந்துகொண்டிருக்க, இடையிடையே பழைய சம்பவங்கள் மற்றொரு தொடராக வந்துபோகலாம். இரண்டு கதைத் தொடர்களும் இணையாகச் செல்லும், அதனதன் காலவரிசை சீராகவே முன்னேறும், அதாவது தனித்தனியாக அவை “லீனியர்”தான்.ஆனால் அதற்கும் மேலே போய், காலத்தை ஒரு சீட்டுக்கட்டைப் போல முழுக்க கலைத்து அடுக்கிய திரைக்கதைகளும் உள்ளன. கதை நடக்கும் கால ஓட்டத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காட்சிகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் வரிசையை மாற்றி அமைத்து, திரைக்கதையாசிரியர் ஒரு வடிவத்தை உண்டாக்குகிறார். இந்தப் புதிய வரிசை, நேர்ப்பாங்கற்ற கால ஓட்டத்தில் இருப்பதனால் ‘நான்லீனியர்’ எனப்படுகிறது.இத்தகைய படங்கள், வெறும் சோதனை முயற்சியாக மட்டும் நின்றுவிடாமல், ஒரு கலை அனுபவமாகவும், பேசாப் பொருளைப் பேசுவதாகவும், அழுத்தமாகக் கதை சொல்வதாகவும், அமைவது அவசியம். இல்லையென்றால் வேலையத்த வேலையாக ஆகிவிடும் இல்லையா?நான்லீனியர் படங்களைப் பற்றி பொதுவாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் சில உண்டு...


•  ரசிகர்களைக் குழப்புவதால் என்ன லாபம்? காலத்தைக் கலைத்துபோட்டு கதை சொன்னால் குழப்பம்தானே மிஞ்சும்?

•  அறிவுஜீவிகளால் (intellectuals), தங்களை அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்பவர்களுக்காகவே அவை எடுக்கப்படுகின்றன.


•  சாதாரணமாகப் புரிந்துவிடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே குழப்பிக் கதைசொல்கிறார்கள்.ஆனால் பல நல்ல படங்கள் இந்த விமர்சனங்களை உடைத்திருக்கின்றன. அவைகளைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஒவ்வொன்றாக அலச இருக்கிறோம்.அதற்கு முன் சுருக்கமாக, இவ்வகைத் திரைக்கதை அமைப்பின் பொதுவான பயன்கள் சிலவற்றைப் பார்க்கலாம். நேர்கோட்டுக் கதைகளில் பார்வையாளர்களுக்கு உணர்த்தமுடியாத எவற்றை இந்த நேர்கோட்டில் இல்லாத கதைகள் மூலம் படைப்பாளிகள் உணர்த்துகிறார்கள்?

•  காலம், இயற்கை, விதி போன்ற பிரம்மாண்டங்களின் முன் மனிதர்கள் எத்தனைச் சிறியவர்கள் என்று காட்டுகிறார்கள்.

•  மனிதனின் ஆசை, வெறுப்பு, உறவு, பகை எல்லாம் விலகி நின்று பார்த்தால் எத்தனை அற்பமானவை என்று விளக்குகிறார்கள்.

•  கோடிக்கணக்கான மனித வாழ்க்கைகளின் மாபெரும் வலைப்பின்னலாக விளங்கும் சமூக அமைப்பை, ஒரு பறவையின் கோணத்திலிருந்து பார்க்கவைக்கிறார்கள்.

•  தனிமனித வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு மாற்றத்தையும், லட்சக்கணக்கான புறக்காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

•  ஒருவனின் நினைவில் பதிந்திருக்கும் தனித்தனி சம்பவங்களைக் காட்டி, பார்வையாளர்களின் மனதில் ஒரு ஒட்டுமொத்தக் கதையை உருவாக்கவும் செய்கிறார்கள்.

•  ஒரே சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்களின் பார்வைக் கோணங்களில் முற்றிலும் வெவ்வேறாக மாறியிருப்பதைப் பதிவுசெய்கிறார்கள்.

இப்படி, நேர்கோட்டுக் கதையில் சொல்வதற்கு சாத்தியமில்லாத பலவற்றை, காலவரிசை மாறிய திரைக்கதையமைப்பு சாத்தியப்படுத்துகிறது. இதைப் பல இயக்குனர்கள் தங்கள் படங்களின் மூலமாக நிரூபித்திருக்கிறார்கள்.அவற்றில் மிக முக்கியமான நான்லீனியர் படங்களையும் அதன் இயக்குனர்களையும் பற்றி நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். காலவரிசை மாறிய இந்தப் படங்களை, நாம் ஒரு ‘மாறுதலுக்காக’ கால வரிசைப்படியே காண்போம்.முதல் படம், சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில், 1916யில் எடுக்கப்பட்டது. மௌனப் பட யுகத்திலேயே நான்லீனியர் திரைக்கதை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யம்தான் இல்லையா?-----------

சகிப்புத்தன்மை இன்மை - INTOLERANCE (1916)

இன்றுவரை நம் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ‘குளோஸ் அப்’ ஷாட்டை முதன்முதலில் படமாக்கியவர் யார் தெரியுமா?இப்போதும் அநேகப் படங்களின் உச்சக் காட்சியில் ‘கடைசி நிமிடத் தப்புதல்’ (Last Minute Rescue) என்கிற ஒன்று இருக்கும். அதாவது, ஒருவர் பிரச்சனையில் மாட்டியிருக்க, அவரைக் காப்பாற்ற இன்னொருவர் வந்துகொண்டிருப்பார். இரண்டும் மாறிமாறிக் காட்டப்படும். பிரச்சனையில் இருப்பவரை ஆபத்து நெருங்கும். காப்பாற்ற வருபவரை தடைகள் நெருக்கும். மாறிமாறிக் காட்டப்படும் படத்தொகுப்பின் வேகம் போகப்போக அதிகரிக்கும். முதலாமவர் மரணத்தின் விளிம்பைத் தொடும் நேரத்தில், திடீரென்று இரண்டாமவர் வந்து அவரைக் காப்பாற்றிவிடுவார். பார்வையாளர்களுக்கு எப்போதும் பிடிக்கும் இந்த கிளைமாக்ஸ் அம்சத்தைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?ஃப்ளாஷ் பேக் யுத்தி?காட்சிச் சட்டத்துக்குள் தேவையற்றவற்றை மாஸ்க் செய்து மறைத்துத் தேவையானதை மட்டும் காட்டும் யுத்தி?ஒரே நேரத்தில் நடக்கும் வெவ்வேறு காட்சிகளை இடைவெட்டிப் படத்தொகுப்புசெய்வது?இவற்றையும் இன்னும் பலவற்றையும் திரைக்கலைக்கு அளித்தவர், அமெரிக்க இயக்குநர் கிரிஃபித் (D.W. GRIFFITH) அவர்கள். அதனால் அவர் “திரைக்கலையின் தந்தை” என்றே அழைக்கப்படுகிறார். ஹாலிவுட் என்னும் ஆலமரத்தின் விதையை ஊன்றியவர் அவர்தான்.முதல் நான்லீனியர் திரைப்படத்தை எடுத்தவரும் அவரே.சினிமா, பிறந்த குழந்தையாக, எளிய குறும்படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருந்த காலம். 1907ஆம் ஆண்டில், 32 வயது கிரிஃபித் தன் கதைகளோடு நியுயார்க் சென்று எடிசனின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்புக்கேட்டார். ஆனால் அவருக்கு நடிக்கவே வாய்ப்புக் கிடைத்தது. அடுத்த ஆண்டே இயக்குநராகத் தன்னை உயர்த்திக்கொண்டார்.மொத்தம் 450 குறும்படங்களை எடுத்தார். அவற்றில், காட்சிகள் வழியே கதை சொல்வதிலிருக்கும் எல்லாப் போதாமைகளையும் எதிர்கொண்டு, அவற்றைச் சரிசெய்வதற்குத் தேவைப்பட்ட பல்வேறு நுட்பங்களைச் சுயமாகப் பரிசோதித்துத் தேர்ந்தார். 1910யில் அவர் ஒரு குறும்படத்தின் படப்பிடிப்புக்காகத் தேர்ந்தெடுத்த ஊர்தான் கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்.அமெரிக்காவின் முதல் முழுநீளத் திரைப்படமான “ஒரு தேசத்தின் பிறப்பு” THE BIRTH OF A NATION (1915) அவரால் இயக்கப்பட்டதுதான். பெரும் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம், மிகப் பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. தொழில்நுட்பத்தினாலும் கதைசொன்ன விதத்தினாலும் பிரமாண்டத்தினாலும் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த அந்தப் படம்தான் உண்மையில் அமெரிக்காவை உலக சினிமாவின் முக்கிய மையங்களில் ஒன்றாக ஆக்கியது.


அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கிரிஃபித் எடுத்த படம்தான் “சகிப்புத்தன்மை இன்மை” INTOLERANCE (1916). மக்களிடம் சினிமா ரசனை முதிர்ச்சி அடைந்திருக்காத அந்தக் காலத்தில், மிகப் புதுமையான நேர்கோட்டில் இல்லாத திரைக்கதையை அமைத்து, அதை அக்காலத்தில் எவரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பெரும் பொருட்செலவில் எடுக்கத் துணிந்தார் கிரிஃபித்.நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 'இண்டாலரன்ஸ்' படத்தின் திரைக்கதை இப்போதும் நவீனமானதாக இருக்கிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நான்கு தனிக் கதைகள், இணையாக ஒரே சமயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் அந்த நான்கு கதைகளும் சமகாலத்தவை அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில், சுமார் 2,500 வருட இடைவெளிக்குள் நடக்கின்றன.மனிதகுலத்தின் சகிப்புத்தன்மையற்ற செயல்களால் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் அழிவுகளையும் தீமைகளையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது திரைக்கதை. கிரிஃபித் படத்துக்கு வைத்திருக்கும் முழுத்தலைப்பு: “Intolerance: Love’s Struggle Throughout the Ages”, அதுவே படத்தின் மைய நோக்கத்தை விளக்கிவிடுகிறது.


நான்கு கதைகளின் பின்னணி:

A.      
பாபிலோனிய காலகட்டம், 539 B.C. / வெவ்வேறு கடவுளர்களை வணங்குபவர்களுக்கு இடையே சகிப்புத்தன்மை மெல்லக் குறைந்து, இறுதியில் பெரும் போரில் முடிந்து, பாபிலோனியாவின் வீழ்ச்சிக்கே காரணமாகிறது.

B.   
இயேசுவின் காலம், 27 A. / சகிப்புத்தன்மையற்ற பரிசேயர்கள் இயேசுவை விரோதித்து, வீண்பழி சுமத்தி, சிலுவையிலேற்றிக் கொல்வது.

C.
பிரஞ்சு மறுமலர்ச்சிக் காலம், 15. / கத்தோலிக்கர்கள் சமதர்ம உடன்படிக்கையை முறித்து, பிராடஸ்டாண்ட்களின் மேல் நடத்திய, ‘புனித பார்த்தலோமி நாளின் மனிதப்படுகொலை’ என்று வரலாற்றில் அழைக்கப்படும் கொலை வெறியாட்டம்.

நவீன அமெரிக்கா, 1914. / சமூக சீர்திருத்த அமைப்பு, விக்டோரிய தூய ஒழுக்கவாதம், அமைப்புரீதியான குற்றவாளிகள், அராஜகமான பெருமுதலாளிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளிகள் என்று எல்லாருமாகச் சேர்ந்து ஒரு சாதாரன இளம் பெண்ணின் வாழ்க்கையை அழிப்பது.திரைக்கதையின் சரடு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவித்தாவிக் கோர்த்துச் செல்கிறது, முடிவை நெருங்க நெருங்க 4 கதைப் பகுதிகளின் நீளமும் குறைந்தபடி வந்து படத்தொகுப்பு வேகமெடுக்கிறது.நான்கு கதைக் களங்களிலும் அந்தந்த வீழ்ச்சிக்குக் காரணமான அரசியல் பின்னணிகளையும், மத, சமூகக் காரணங்களையும் கிரிஃபித் ஆராய்ந்திருக்கிறார்; ஆனால் அதேசமயத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சாதாரனமான எளிய மக்களையே மையப்படுத்தி அவர்கள் அடையும் பாதிப்புகளையே விரித்துரைத்திருக்கிறார்.மௌனப் படங்களில் வழக்கமாகக் காட்சிக்கிடையே காட்டப்படும் வசன அட்டைகள், இப்படத்தில் மிகுந்த தரத்தோடு இருக்கின்றன. இலக்கிய வாசிப்பு இல்லாதவர்களுக்கு அவை புரிந்திருக்குமா என்றே தெரியவில்லை. குறிப்பாக ஒரு கதைக்களத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதற்கு இடையில், இணைப்புக்காக எப்போதும் ஒரு ஷாட் காட்டப்படுகிறது, குழந்தையின் தொட்டிலை ஆட்டியபடி இருக்கும் தாய். அதனுடன் வரும் வசன அட்டையில், வால்ட் விட்மனின் கவிதை வரியான “Out of the Cradle Endlessly Rocking” காட்டப்படுகிறது.தலைமுறை தலைமுறையாக மனிதகுலம் பிறந்து, அன்புக்காக ஏங்கி வாழ்ந்து, சகிப்புத்தன்மை இன்மையால் சண்டையிட்டு மடிந்துகொண்டிருப்பதை, படம் நெடுகிலுமே நாம் உணர்ந்தபடி இருக்கிறோம். இந்தக் கருத்தை நமக்குக் கடத்துவது முழுக்க முழுக்க அதன் நான்லீனியர் திரைக்கதை அமைப்புத்தான்.உலகிலேயே அதிக செலவுசெய்து எடுக்கப்பட்ட படமாக அதன் காலத்திலும் அதன்பின் ஒரு தலைமுறை வரையிலும்கூட இருந்தது 'இண்டாலரன்ஸ்'.100அடி உயரமான பாபிலோனின் பெருஞ்சுவர் செட், போர்க்களக் காட்சிகள், வேலை நிறுத்தத்தின்போது வெடிக்கும் கலவரம், அந்தந்த காலகட்டங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் ஆடை வடிவமைப்பு, பல்லாயிரம் துணை நடிகர்களைப் பயன்படுத்திய விதம் எல்லாமே அது எடுக்கப்பட்ட காலத்தை மீறி நிற்கின்றன.வணிகரீதியில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது படம். அக்காலப் பார்வையாளர்கள், குறுகிய நேரமே ஓடுகிற, புரிந்துகொள்ளச் சிரமமில்லாத படங்களுக்கே பழகியிருந்தார்கள். 3 மணி நேரத்துக்கும் மேல் ஓடுகின்ற, மிகச் சிக்கலான கதையமைப்பை அவர்களால் உள்வாங்க முடியவில்லை.அப்படத்தின் தோல்வியால் கிரிஃபித்தின் நிறுவனம் திவாலானது, பொது இடத்தில் போடப்பட்ட பாபிலோன் செட்டை உடைக்கும்படி நகராட்சி ஆணையிட்டும்கூட அதற்கும் பணமின்றி தத்தளித்தார் கிரிஃபித்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த செட் தானாக இடிந்து விழுந்தபிறகே அகற்றப்பட்டது.ஆனால், ஆஸ்கார் விருதுகள் விழாவுக்கான நிரந்தரக் கட்டிடமாக 2001-யில் கட்டப்பட்ட கோடாக் திரையரங்க வளாகத்தின் நுழைவு வாயிலை, அதே பாபிலோனிய பெருஞ்சுவர் செட்டின் மாதிரி வடிவமாக அமைத்து, கிரிஃபித்துக்கு மரியாதை செய்திருக்கிறது ஹாலிவுட்.அவரை “நம் எல்லாருக்கும் ஆசிரியர்” என்று புகழ்ந்த சார்லி சாப்ளின் முதல், ஜான் ஃபோர்ட், ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், ஆர்சன் வெல்ஸ், சிசில் பி டிமிலி, கிங் விதோர், விக்டர் ஃபிளமிங் போன்று அடுத்து வந்த பெரும் இயக்குநர்கள் பலரும் கிரிஃபித்தையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு திரைக்கலையை வளர்த்தெடுத்தார்கள்.ஆர்சன் வெல்ஸ், திரைத்துறைக்கு கிரிஃபித்தின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லும்போது "உலகில் வேறு எந்த ஒரு கலை வடிவமும் ஒரு தனி மனிதனுக்கு இந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்காது" என்றார்.